Wednesday, June 11, 2025

மாத்தி யோசி. உலகத்தை மாற்று..

     சென்னையில் இரண்டு பக்கமும் வீடுகளால் சூழப்பட்ட ஒரு பெரிய தெரு இருந்தது. அதே தெருவில் ஒரு காலி மனையும் இருந்தது. வழக்கம்போல் அந்த பகுதியில் இருந்த குடிமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை அங்கு கொட்டி வைத்திருந்தார்கள். அதே தெருவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் இருந்தான் அவன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவனை அந்த தெருவில் இருந்த அனைவரும் நம்மாழ்வார் என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஏனென்றால், அந்த பையன் அனைவரிடமும் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள். உங்கள் வீட்டு RO-வில் ஏசியில் வெளியேறுகிற நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துங்கள். எல்லார் வீட்டிலும் மழைநீர் தோட்டி அமைத்து மழைநீரை சேமியுங்கள் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர் வைத்திருந்தார்கள்.

    அதேபோல் தான் அவன் அந்த தெருவில் இருந்த அனைவரிடமும் காலி இடத்தில் குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று சொல்வான். ஆனால், அவன் எவ்வளவு சொல்லியும் யாரும் அதனை கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்த காலி இடத்தில் குப்பைகளைக் கொட்டிக் கொண்டே தான் இருந்தார்கள். கேட்டால் ”சனிக்கிழமை ஒருநாள் தான் நம்முடைய தெருவுக்கு குப்பை வண்டி வருகிறது. அதுவரை இந்த குப்பைகளை என்ன செய்வது” என்று கூறி குப்பைகளைக் கொட்டிக் கொண்டேதான் இருந்தார்கள்.

    இதனால் அந்த இளைஞன் அந்த ஏரியா கவுன்சிலரிடமும், கார்ப்பரேஷன் ஆஃபீஸிலும் பேசி வாரத்திற்கு ஒரு நாள் வந்துக் கொண்டிருந்த குப்பை வண்டியை வாரத்திற்கு இரண்டு நாள் வர வைத்தான்.

இதற்கு பிறகாவது மக்கள் அந்த காலி இடத்தில் குப்பைகளை கொட்டாமல் இருப்பார்கள் என்று பார்த்தால் அப்பொழுதும் குப்பைகளைக் கொட்டிக் கொண்டே தான் இருந்தார்கள்.

இந்த மக்களுக்கு எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லையே என்று யோசித்திக் கொண்டிருந்தபொழுது தான் அந்த தெருவில் நிறைய 10 முதல் 16 வயதுவரை உள்ள குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

உடனே இந்த நம்மாழ்வார் அந்த குப்பைகளைப் பார்த்தார். அந்த குழந்தைகளைப் பார்த்தார். திரும்பி அந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு வித்தியாசமான எண்ணம் அவருடைய மனதில் உதித்தது.

அவர் அந்த குழந்தைகளை அழைத்து ”உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு வீடு இருக்கிறது. அதேபோல் உங்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருக்கிறது. நீங்கள் தான் அந்த நாட்டிற்கே ராஜா. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

”எங்க ஒவ்வொருத்தருக்கும் தனி நாடு. அந்த நாட்டிற்கு நாங்கள் தான் ராஜாவா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் குழந்தைகள்.

ஆமாம். நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒரு நாட்டின் ராஜா. அதுமட்டுமல்லாது உங்கள் ஒவ்வொருத்தருக்கும் வாரத்திற்கு 200 ரூபாய் பாக்கெட் மணி. இது எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமைக் காலை 6.30 மணிக்கு இந்த இடத்திற்கு வரவேண்டும்..” என்று அழைத்தார்.



சரி என்று சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக் காலையில் 6.30 மணிக்கு அந்த குப்பையைக் கொட்டி வைத்திருந்த அந்த காலி இடத்திற்கு குழந்தைகள் வந்தார்கள்.

வந்துப் பார்த்தால் அவர்களுக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது.

அது என்னவென்றால், நம்மாழ்வார் அந்த இடத்தை சுத்தமாக க்ளீன் செய்து வைத்திருந்தார்.

அது மட்டுமல்லாது, அவர் அந்த காலி இடத்தை ஆறாகப் பிரித்து பகிர்ந்து வைத்திருந்தார்.

பிறகு அந்த ஆறு இடத்திற்கும்

  •       குறிஞ்சி தேசம்,
  •       முல்லைதேசம்
  •       மருத தேசம்
  •       நெய்தல் தேசம்
  •       பாலை தேசம்
  •       சோழ தேசம்

என்று சிறிய அட்டைகளில் பெயரெழுதி அந்த இடங்களில் நட்டு வைத்திருந்தார்.

நம்முடைய தெருவில் பெரிய குழந்தைகளாக இருக்கிற ஆறு பேர் இந்த ஆறு தேசத்திற்கும் ராஜா. அவர்களுக்கு கீழே மற்ற குழந்தைகள் இருக்க வேண்டும். சுழற்சி முறையில் இது மாறிக் கொண்டே இருக்கும். சம்மதமா? என்று கேட்டார். எல்லாரும் “ஓகே” என்று சொன்னார்கள்.

”அது சரி. நாம் இந்த இடத்தில் என்ன செய்யப் போகிறோம்?” என்று அந்த குழந்தைகள் கேட்டார்கள்.

உடனே, சாக்கில் மூடி வைத்திருந்த இன்னொரு இடத்தைக் காட்டினார். ”அந்த சாக்கைத் திறந்துப் பாருங்கள்..” என்று கூறினார்.

எல்லா குழந்தைகளும் ஆர்வத்தோடு சென்று அதனைத் திறந்துப் பார்த்தார்கள். அந்த சாக்குப் பையில் மாடித் தோட்டத்தில் வைப்பது போன்று சில பாக்கெட்கள் மண்களால் நிரப்பப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு தேசத்திற்கும் ஆறு பாக்கெட்கள்.

இந்த பாக்கெட் மணலில் தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, கத்திரிக்காய், கீரை வகைகள் என்று சில விதைகளைப் போடலாம். உங்கள் தேசத்தில் என்ன விதைப் போட போகிறோம் என்பதையும், எதனை விளைய வைக்க போகிறோம் என்பதையும் அந்த நாட்டு அரசர்கள் தான் திர்மானிக்க வேண்டும்.

நீங்கள் இந்த பாக்கெட்களை பத்திரமாக பாதுகாத்தால் இன்னும் சில வாரங்களிலேயே இந்த காய்கறிகள் மூலமாக நீங்கள் சம்பாதிக்க முடியும். இந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். இது உங்களுடைய தேசம். நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று நம்மாழ்வார் கூறினார்.

ஆரம்பத்தில் சில தேசத்துக் குழந்தைகள் மட்டும் தினமும் ஆர்வத்துடன் வந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி, அந்த செடிகளை வளர்த்தார்கள். நம்மாழ்வாரும் அவர்களுக்கு நிறைய உதவி செய்தார். சில வராத குழந்தைகளின் தேசத்தையும் அவரே பாதுகாத்தார்.

சில வாரங்களிலேயே அந்த இடத்தில் இருந்து தக்காளியும் வெண்டைக்காயும் காய்க்க ஆரம்பித்தது. குழந்தைகள் அந்த தெருவிற்கு என்று வாட்ஸ்அப் க்ரூப் ஒன்று ஆரம்பித்து அந்த காய்கறிகளை விற்க ஆரம்பித்தார்கள்.

சுத்தமான காய்கறிகள் என்பதால் ஏகப்பட்ட தேவை இருந்தது அந்த காய்கறிகளுக்கு. ஒரு தேசத்தில் விளைந்த விளைச்சலைப் பார்த்ததும் மற்ற தேசத்து குழந்தைகளும் இன்னும் உற்சாகம் ஆனார்கள். காய்கறிகள் விற்ற பணம் மூலமாக அந்த குழந்ததைகள் இன்னும் சில பாக்கெட்களை வாங்கினார்கள்.

மேலும், ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசுகள் என்று கேட்காமல் இது போன்ற மாடித் தோட்ட பாக்கெட்களை வாங்கித் தர சொன்னார்கள். அந்த காலி இடம் மட்டுமல்லாது அந்தந்த தேசத்து குழந்தைகள் வீட்டுடைய கார் பார்க்கிங்கில் இருக்கும் இடம் வீட்டுப் பால்கனி என்று நிறைய இடங்களில் காயகறி செடிகள் அமைத்து இன்னும் விளைச்சலை அதிகம் ஆக்கினார்கள்.

அந்த விளைச்சல் காய்கறிகளை வாட்ஸ்அப்பில் விற்கத் தொடங்கி, இன்று அந்த தெருவிற்கே காய்கறி விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

வீட்டில் கூட வேலைப் பார்க்காத குழந்தைகள் தங்களுக்கு என்று ஒரு வருமானம் வந்ததும் தங்களுடைய தேசத்திற்காக வேலைப் பார்த்தார்கள். வந்த வருமானத்தையும் அந்த குழந்தைகள் சரியாக பயன்படுத்தினார்கள்.

அந்த ஏரியா நம்மாழ்வாரின் பெரும் முயற்சியால் ஆரோக்கியமான காய்கறி வளர்ப்பு முறை, பொறுப்புணர்வு, நிதி நிர்வாகம் என்று அந்த குழந்தைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டார்கள்.

பின்னாளில் அந்த தெருவின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு தலைவனாக உருவெடுக்கப் போகிறார்கள். ஒவ்வொருத்தரும் இன்னொரு நம்மாழ்வாராக மாறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

பார்த்தீர்களா?

இந்த இடத்தை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்று சிறிது மாற்றி யோசித்ததால் இன்று ஒரு தெருவே ஆரோக்கியமாக மற்ற தெருக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.


பெரிய பெரிய நிறுவங்கள், ஒரு நாட்டினுடைய தலைவர்கள் மட்டும் தான் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்பதில்லை. இதுபோல் ஒவ்வொரு தனிமனிதனும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ‘இந்த மாதம் பட்ஜெட்டில் எப்படி ஆயிரம் ரூபாயை சேமிப்பது… பிறந்த நாளை எப்படி வித்தியாசமாக கொண்டாடுவது…’ என்று ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக யோசியுங்கள். உங்கள் சுயநலத்தில் சிறிது பொதுநலமும் கலந்திருந்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

All the best…!

Thursday, May 29, 2025

கொலம்பஸ்

 இத்தாலியில் உள்ள துறைமுக நகரமான ஜெனிவாவில் கம்பளி நெசவு செய்து வியாபாரம் செய்யக்கூடிய டொம்னிகோ கொலம்போ (Domenico Colombo) எனும் நெசவாளிக்கு மகனாகப் பிறந்தவர் தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ். டொம்னிகோ அவர்கள் தன்னுடைய மகனும் ஒரு நெசவாளியாக தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், கொலம்பஸின் கனவுகள் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது.

  • v  நிறைய கடற்பயணங்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • v  புதிய புதிய தீவுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
  • v  பெருமளவில் பணம் சம்பாதிக்க வேண்டும்.

 


 இது போன்று அவரது கனவுகள் பெரியதாக இருந்தன. தன்னுடைய கனவுகளுக்கு ஏற்றமாதிரி சிறு சிறு தீவுகளுக்கு வணிகக் கப்பலில் வணிக பயணம் மேற்கொண்டார். அந்த பயணங்கள் மூலமாக கடல் பற்றியும் கப்பல் பற்றியும் மாலுமிகள் பற்றியும் நிறைய தெரிந்துக் கொண்டார். இருந்தாலும் என்றாவது ஒருநாள் கடல் மார்க்கமாகவே இந்தியாவை அடைய வேண்டும் என்று பெரிய கனவுகளையும் அவர் கண்டார்.

பிறகு பல புத்தகங்களையும் பல வரைப்படங்களையும் திரட்டி தான் இப்பொழுது இருக்கக்கூடிய பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி பயணம் செய்தால் இத்தனை நாட்டிக்கல் தூரத்தில் இந்தியாவை கடல்மார்க்கமாகவே அடையலாம் என்று அவர் கண்டுபிடித்தார்.

இதனை கண்டுபிடித்ததும் தன்னுடைய இந்த பயணத் திட்டத்தைக் காட்டி பல்வேறு சிறு வணிகர்களிடம் கப்புலும், தேவையான உணவுப் பொருட்களும் வாங்க பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். ஆனால், யாருமே அவருக்கு உதவவில்லை.


இத்தாலி போர்ச்சுக்கல் என்று பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு மன்னர்களிடம் பேசிப்பார்த்தார். ஆனால், யாருமே அவருக்கு உதவ தயாராக இல்லை.

மாதங்கள் வருடங்களானது. இருந்தபோதும், கொலம்பஸ் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருந்தார். சில வருடங்கள் கழித்து அவருடைய பயணத்திற்கு தேவையான கப்பல்களையும், கப்பல் நிறைய உணவுப் பொருட்களையும் வழங்க ஸ்பெயின் நாட்டின் இளவரசி இசபெல்லா முடிவு செய்தார்கள்.

இப்பொழுது தான் கொலம்பஸ்க்கு புது நம்பிக்கையே பிறந்தது. ஆனால், அதே நேரத்தில் புது சிக்கலும் பிறந்தது. அது என்னவென்றால், கொலம்பஸ் உடன் கடல் பயணத்தில் ஈடுபட மாலுமிகள், அந்த நாட்டு மக்கள் என்று யாருமே முன்வரவில்லை. இந்தக்காலத்திலேயே பயணம் செய்ய சிலர் பயப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட ஐநூறு வருஷத்துக்கு முன்பு அதுவும் ஆபத்தான கடல் பயணத்திற்கு யார் தயாராக இருப்பார்கள்?

’நாம் புது வரலாறு படைக்கப் போகிறோம். இதுவரை கடல்மார்க்கமாக இந்தியாவை யாருமே வந்தடைந்ததே இல்லை. நாம் மட்டும் அதனை சாதித்து விட்டோம் என்றால் சரித்திரத்தில் என்றுமே நம்முடைய பெயர் நிலைத்து நிற்கும். அது மட்டுமல்லாது, வரும்பொழுது நாம் பொன், பொருளோடு திரும்ப வரலாம்’ என்று அவர் அனைவரிடமும் சொல்லிப் பார்த்தார்.

ஆனால், அவருடன் ஆபத்தான கடற்பயணம் மேற்கொள்ள யாருமே தயாராக இல்லை.


 என்னடா இது? இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது தான் நமக்கு கடல் பயணம் செய்ய தேவையான பொருளுதவி கிடைத்துள்ளது. ஆனால், இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலா? என்று அவர் சோர்ந்துப் போகவில்லை. கொலம்பஸ் இந்த இடத்தில் தான் வித்தியாசமாக சிந்தித்தார்.

மரணத்திற்கு பயந்துதானே சாதாரண மனிதர்கள் பயணத்திற்கு வர மறுக்கிறார்கள். ஏறகனவே மரணத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய மரணத் தண்டனைப் பெற்ற சிறைக் கைதிகளை நம்மோடு அழைத்துக் கொண்டு சென்றால் என்ன? என்று வித்தியாசமாக சிந்தித்தார் கொலம்பஸ்.

தன்னுடைய இந்த வித்தியாசமான சிந்தனையை சிந்தனையாக மட்டும் வைத்திருக்காமல் உடனே அரசவையிலும், மரணத் தண்டனைப் பெற்றிருந்த கைதிகளிடமும் பேசி கடல் பயணத்திற்கு அனுமதி வாங்கினார்.



பிறகு 1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூன்று கப்பல்களோடு கொலம்பஸ் தன்னுடைய கடற்பயணத்தைத் தொடங்கினார். அவர் கிழக்கு நோக்கி பயணிப்பதற்கு பதிலாக மேற்கு நோக்கி திரும்பிவிட்டார். ஆனால், அந்த பயணம் தான் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.

அமெரிக்காவைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை கொலம்பஸ்க்கு கிடைத்தது. இவருடைய இந்த பயணம் தான் போர்ச்சுக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து என்று பலவேறு ஐரோப்பிய நாட்டவர்கள் அமெரிக்காவில் குடிபெயர காரணமாக அமைந்தது.

தன்னுடைய வாழ்நாளில் இதேபோல் நான்கு முறை அமெரிக்காவிற்கு பயணம் செய்தார் கொலம்பஸ். அவருடைய இந்த கடற்பயணம் தான் ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே வணிகப் போக்குவரத்து நடைபெற காரணமாக அமைந்தது.

கொலம்பஸ் அவர்களிடம் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற பிரம்மாணடமான கனவு இருந்தது. ரிஸ்க் எடுத்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற துணிச்சலும் இருந்தது. ஆனால், அது மட்டும் போதுமா? யாரும் தன்னுடன் வரத் தயாராக இல்லாத போதிலும் அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற மாத்தி யோசிக்கும் திறனும் இருந்தது.



நீங்களும் உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது பல பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால், அதனை எப்படி சமாளிக்கலாம் என்று நீங்களும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இதுபோல் மாத்தி யோசிக்கும் திறன் உங்களிடமும் இருந்தால், உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

All the best…!

Saturday, May 24, 2025

சமயோசித புத்தி

 ஒரு மிகப்பெரிய தொழிலதிபர், உதாரணத்திற்கு அம்பானி போன்று  மிகப்பெரிய தொழிலதிபர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தொழிலதிபரின் மகளுக்குத் திருமணம். அதனால் அவர், அவருடைய மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமண தினத்தன்று ஒரு மிகப்பெரிய ஆடம்பர கார் (Luxury Car) பரிசளிக்க விரும்பினார்.

ஆடம்பர கார் என்றால் சாதாரண பென்ஸ் (Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்று அல்ல. அதிலும் மிகவும் வசதிப் படைத்தவர்களுக்கு என்று Limited Editions என்று ஒரு சில கார் நிறுவனங்கள்  தனியாக புத்தம்புது வசதிகளுடன் கூடிய ஆடம்பர கார்களை வெளியிடுவார்கள். அது போல் அந்த தொழிலதிபர் ஒரு காரை பரிசாக அளிக்க விரும்பினார். அதுவும் இந்த உலகத்திலேயே இதுபோல் இரண்டு கார்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஒன்று தன்னுடைய மகளிடமும், மற்றொன்று தன்னுடைய மருமகனிடமும் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இது போல் மிகவும் விலையுயர்ந்த இரண்டு ஆடம்பர கார்களை தயாரித்துத் தருமாறு ஒரு மிகப்பெரிய கார் நிறுவனத்திடம் கேட்டார்.

அந்த தொழிலதிபரோ இந்த உலகத்தின் முதல் 5 பணக்காரர்களில் ஒருவர். அவருடைய மகளின் திருமணத்திற்கு நம்முடைய பிராண்ட் ஆடம்பர காரை பரிசளிக்கிறார் என்றால் அது நமக்குதான் பெருமை. மேலும் நம்முடைய பிராண்ட்க்கு இலவசமாக, ’இவரே இந்த கார் தான் வாங்கினார்’ என்ற விளம்பரமும் கிடைக்கும். அதுமட்டுமல்லாது இரண்டு கார்கள் மட்டும் தான் என்பதால் இலாபம் மட்டுமே பல கோடி ரூபாய் கிடைக்கும்.

அதனால், நாங்கள் இந்த கார்களை மிகவும் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் செய்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தொழிலதிபர் “கார் ரெடியா?” என்று போன் செய்து கேட்டார்.

“கார் சூப்பாராக வந்திருக்கிறது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொழிற்சாலைக்கு வந்து காரை பார்க்கலாம்” என்று கார் நிறுவனத்தின் மேலாளரும் சொல்லிவிட்டார்.

அதனால், அந்த தொழிலதிபரும் கார் தொழிற்சாலைக்கு சென்று காரைப் பார்க்கிறார். காரின் வெளிப்புற தோற்றம் அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மிகவும் புதுமையாகவும், தனித்துவமாகவும் இருந்தது. அதனைப் பார்த்த உடனேயே அந்த தொழிலதிபருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் அந்த காரின் கலரே மிகவும் வித்தியாசமாக, புதுவிதமாக பளப்பளப்பாக இருந்தது. இரண்டு காரும் ஒன்றுக்கொன்று தனித்துவமாக இருந்தது.

காரின் வெளிப் புறத்தோற்றம் இப்படி என்றால், உள்புறத்தோற்றம் அதைவிட அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுவிதமான டெக்னாலஜியும் அற்புதமாக வடிவமைத்திருந்தார்கள்.


அந்த தொழிலதிபர் காரை பார்த்துவிட்டு அசந்துவிட்டார்.

எனக்குக்கூட நீங்கள் இதுபோன்ற காரை செய்துத்தரவில்லை. ரொம்ப ரொம்ப சூப்பர். நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அழகான வேலைப்பாடுகளுடம் வடிவமைத்து இருக்கிறீர்கள்.

எனக்கு இந்த காரை திருமணத்தன்று காலை சரியாக 10 மணிக்கு திருமண மண்டபத்தில் நிறுத்திவிடுங்கள். துல்லியமாக பத்து மணிக்கு நிறுத்த வேண்டும். நேரத்தை மட்டும் மறந்துவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு தொழிலதிபர் கிளம்பிவிட்டார்.

திருமண தேதியன்று காலையில் அனைத்து அலங்காரங்களையும் முடித்துவிட்டு எட்டு மணிக்கு காரை தொழிற்சாலையில் இருந்து வெளியே எடுத்துவர முயற்சித்தார்கள். அப்படி காரை வெளியே எடுத்து வரும்போது தான் ஒரு மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு காத்திருந்தது. காரை தொழிற்சாலையில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை.

காரணம், தொழிற்சாலையின் நுழைவு வாயிலை விட, காரின் உயரம் அதிகமாக இருந்தது.

இப்பொழுது அந்த காரை வெளியே எடுத்தால் கண்டிப்பாக காரில் கீறல்கள் விழும். இன்னும் இரண்டு மணிநேரம் தான் இருக்கிறது. இரண்டு மணிநேரத்தில் காரை திருமண மண்டபத்தில் டெலிவரி செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று நிறுவனத்தின் மேலாளர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒரு ஊழியர், “பரவாயில்லை. காரை நாம் கீறல்களோடு வெளியே எடுத்துவிடலாம். அதன்பிறகு பெயிண்ட் அடித்து சரி செய்துவிடலாம்” என்று சொன்னார்.

ஆனால், அது அவ்வளவு நல்ல யோசனை இல்லை.

இதுபோல் ஒவ்வொரு ஊழியர்களும் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள்.

ஆனால், எதுவுமே சரியான யோசனையாகப் படவில்லை. அந்த யோசனைகளால் சீக்கிரமாக காரை வெளியே எடுத்துவிடமுடியாது. நேரம் வேறு சென்றுக் கொண்டே இருக்கிறது.

காரை சொன்ன நேரத்திற்கு டெலிவரி செய்யவில்லை நஷ்டமாவதைப் பற்றிக்கூட கவலையில்லை. ஆனால், சொன்ன நேரத்திற்கு காரை டெலிவரி செய்யவில்லை என்ற அந்த நிறுவனத்தின் மதிப்பு மொத்தமாக குறைந்துவிடும்.

நேரம் வேறு சென்றுக் கொண்டே இருக்கிறது. அந்த குழுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சரியாக அந்த தொழிலதிபரின் உதவியாளரும் மேலாளருக்கு போன் செய்கிறார். இந்த மேலாளர் குழுவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.


அதே நேரத்தில் அந்த கார் நிறுவனத்தை உருவாக்கியவர் தொழிற்சாலைக்கு வந்தார். அவருக்கு சுமார் 72 வயது இருக்கும். பல வருடங்களுக்கு முன்பாகவே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டு இளைஞர்களிடம் நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். இருந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிடுவார்.

அவரைப் பார்த்ததும் தொழிற்சாலையில் இருந்த மேலாளர்கள் மேலும் பயந்துவிட்டார்கள். ”என் நிறுவனத்தின் பெயரைக் கெடுத்துவிட்டீர்களே..” என்று பயங்கரமாக திட்டப்போகிறார். என்ன நடக்கப் போகிறதோ.. என்று அனைத்து ஊழியர்கள் பயத்துடன் காணப்பட்டார்கள்.

72 வயதானாலும், அந்த வயதிலும் மிடுக்கான தோற்றத்துடன் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். அவர் தொழிற்சாலைக்கு உள்ளே வந்து அனைவரின் முகத்தையும் பார்த்ததுமே ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டார்.

”என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.

இது போல் காரின் உயரம் நுழைவு வாயிலின் உயரத்தை விட அதிகமாக இருப்பதால் காரை வெளியே எடுக்க முடியவில்லை என்று சொன்னார்கள்.

”எப்பொழுது டெலிவரி செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

”இன்னும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.

அவர் உடனே அந்த காரை நன்றாக சுற்றி வந்து பார்த்தார். காருக்கும் அந்த நுழைவு வாயிலுக்கும் நடுவே நின்று அந்த காரின் உயரத்தை கண்ணிலேயே அளந்தார். அடுத்து அந்த நுழைவுவாயிலை ஒரு பார்வைப் பார்த்தார். உடனே அவர் முகத்தில் புன்சிரிப்பு தான்.

ரொம்ப சாதாரண விஷயம் தான்… இதற்கா இவ்வளவு நேரம் அனைவரும் குழும்பிப் போய் இருந்தீர்கள்?

நம் காரின் உயரம் அந்த நுழைவுவாயிலின் உயரத்தைவிட, ஒரு இஞ்ச் தான் அதிகமாக இருக்கிறது. நம் காரினுடைய டயரில் இருக்கும் காற்றை ஒரு இஞ்ச் குறைத்துவிட்டாலே போதும். கார் எந்த சேதாரமும் இல்லாமல் வெளியே வந்துவிடும் என்று கூறினார்.

அந்த மேலாளர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவர் சொன்ன உடனேயே கார் டயரில் இருக்கும் காற்றை வெளியேற்றும் வேலைகள் நடந்தது. அப்படி காற்று வெளியேற்றப்பட்டதும் அந்த நுழைவுவாயிலில் இருந்து கார் சுலபமாக வழுக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டது. அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் ஏதோ இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தது போன்று ஆராவாரம் செய்தார்கள். ஒவ்வொருத்தர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அங்கிருந்த மேலாளர் ஒருவர், “உங்களுக்கு மட்டும் எப்படி சார் இந்த யோசனை தோன்றியது?” என்று கேட்டார்.

அதற்கு அவர் கூறிய பதில், “முதலில் நீ உன்னையும் உன் தொழிலையும் உண்மையாக நேசி. என்னால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியும் என்று உன்னை முழுவதுமாக நம்பு. உனக்கு இதுபோன்ற வித்தியாசமான யோசனைகள் தோன்றும்.” என்று சொன்னார்.

நீங்களும் உங்களால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்று உங்களை முழுவதுமாக நம்புங்கள். உங்களாலும் மாத்தி யோசிக்க முடியும்.

All the best...!

Thursday, May 15, 2025

லல்லு பிரசாத் யாதவ்

             இந்தியாவிற்கு முகலாயர்கள் ஆட்சி பொற்காலம். சோழர்கள் ஆட்சி பொற்காலம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல இந்திய இரயில்வேதுறைக்கே பொற்காலம் என்று சொன்னால் அது லல்லுபிரசாத் யாதவ் அவர்கள் இரயில்வே மந்திரியாக இருந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டுகள் தான்.

லல்லு இரயில்வே மந்திரி ஆவதற்கு முன்னால் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ராகேஷ் மோகன் தலைமையில் 18 பேர் கொண்ட ஒரு குழு ’நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருக்கும் இரயில்வே துறையை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம்’ என்று ஆய்வு செய்தது. ஆனால், இந்த குழு  ”இரயில்வே துறையை இன்னும் இந்திய அரசாங்கமே தூக்கி சுமப்பது வீண் சுமை. நஷ்டத்தில் இருக்கக்கூடிய இரயில்வே துறையை யாராலுமே காப்பாற்ற இயலாது. அதனால், இந்த துறையை எவ்வளவு சீக்கிரம் தனியாருக்கு மாற்றுகிறோமோ அது அரசாங்கத்திற்கு நல்லது” என்று அறிக்கைக் கொடுத்தது.


இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இரயில்வே மந்திரி ஆனார் லல்லு பிரசாத் யாதவ். லல்லு ஏறகனவே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் வேறு கைதானவர். இனி லல்லு இரயில்வே துறையையே ஊழல் சாம்ராஜ்ஜியமாக மாற்றிவிடுவார் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்தது. ஆனால், லல்லு பிரசாத் ஆடிய ஆட்டமே வேறு. எதிர்கட்சிகள் மட்டுமல்ல உடன் இருந்த கூட்டணி கட்சிகளே மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு லல்லு சிறப்பாக நிர்வகித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

லல்லு மந்திரி ஆனதும் செய்த முதல் வேலை போக்குவரத்துப் பற்றி அத்தனை நுணுக்கங்களும் தெரிந்த “சுனில் குமார்” என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை தன்னுடைய உதவியாளராக Officer on Special Duty-ல் நியமித்தார்.

ஜூலை 6, 2004 ஆம் ஆண்டு லல்லு பிரசாத் தன்னுடைய முதல் இரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதற்கு முன்பு சில வருடங்களாகவே இரயில்வே பட்ஜெட் என்றாலே டிக்கெட் விலையை ஏற்றுவது தான் என்ற எண்ணம் பெரும்பாலும் மக்களிடையே இருந்தது.  ஆனால், லல்லு டிக்கெட் விலையை ஏற்றவில்லை. மாறாக டிக்கெட் விலையைக் குறைத்தார்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட்கள் 1% என்றும், இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்களுக்கு 10% என்றும், முதலாம் வகுப்பு ஏசி டிக்கெட்களுக்கு 18% என்றும் டிக்கெட் விலையைக் குறைத்தார். இப்படி தான் ஆடிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார் லல்லு பிரசாத் யாதவ்.

இப்படி டிக்கெட் விலையை குறைத்துவிட்டால் மட்டும் மக்கள் அனைவரும் பேருந்தில் போகாமல் இரயிலில் சென்று இரயில்வே துறை இலாபத்தி சென்றுவிடப் போகிறதா என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால், அடுத்து எப்படி மக்களை பேருந்தில் இருந்து இரயில்வே பக்கம் திருப்பலாம் என்று லல்லு பிரசாத் யோசித்துக் கொண்டே இருந்தார்.

மக்கள் ஏன் இரயிலில் பயணிக்கவில்லை?

இரயிலில் முன்பதிவு டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

டிக்கெட் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

புதிதாக புது இரயில்கள் இயக்க வேண்டும்.

ஆனால், புது இரயில்கள் இயக்கும் அளவுக்கு இரயில்வே துறையில் பணம் இல்லை.

இப்பொழுது என்ன செய்வது?

இந்த இடத்தில் தான் லல்லு பிரசாத் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தார்.

புது இரயில் விடாமல் எப்படி இரயில்களில் இருக்கும் இருக்கைகளை அதிகப்படுத்துவது என்று யோசித்தார்.

அனைத்து இரயில்களிலும் 16 அல்லது 18 பெட்டிகள் தான் இருந்தன. லல்லு பிரசாத் அதனை மாற்றி எஞ்சின் சக்தியை 24 பெட்டிகள் இழுக்கும் அளவுக்கு அதிகப்படுத்த அறிவுருத்தினார். அதாவது ஒவ்வொரு இரயிலிலும் கூடுதலாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன.

For Example,

ஒரு பெட்டிக்கு 72 இருக்கைகள் என்று கணக்கு செய்து கொள்ளுங்கள்.

16 பெட்டிக்கு 16 * 72 = 1152 இருக்கைகள்.

அதுவே 24 பெட்டிகள் என்றால் 24 * 72 = 1728 இருக்கைகள்.

இதன்மூலம் ஒவ்வொரு இரயிலிலும் கூடுதலாக 50 சதவீத பயணிகள் பயணிக்க முடிந்தது.


அதே போல் அனைத்து இரயில்களும் 45-50 Kmph வேகத்தில் தான் ஓடிக்கொண்டிருந்தது. எஞ்சின் சக்தியை அதிகரித்ததன் மூலம் மணிக்கு 55 கிமீ வேகத்தில் இயங்குவது போன்று அதிவேக இரயில்களாக மாற்றினார். 

அதிவேக இரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு 20 ரூபாய் கூடுதலாக அரசாங்கத்திற்கு கிடைத்தது.

இந்த இரண்டு செயல்கள் மூலமாகவே கோடிக்கணக்கான ரூபாய் இரயில்வே நிர்வாகத்திற்கு இலாபமாக கிடைத்தது.

பயணிகள் இரயிலில் மாற்றம் கொண்டுவந்த பிறகு சரக்கு இரயில் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார் லல்லு பிரசாத்.

இரும்புத் தாது, கரி உரம், சிமெண்ட் போன்ற பொருட்கள் எல்லாம் காந்தி காலத்தில் இருந்து மானிய விலையில் சரக்கு இரயிலில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த பொருட்களின் விலையெல்லாம் பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆனால், இதன் சரக்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று எந்த இரயில்வே மந்திரிக்கும் தோன்றவே இல்லை. லல்லு பிரசாத் இந்த சரக்குக் கட்டணத்தை உயர்த்தினார்.

அடுத்தது ஒரு இரயிலில் 20.3 டன் அளவுக்குதான் எடை ஏற்ற வேண்டும். இதற்கு மேல் ஏற்றினால் வண்டியின் Axle Load என்று சொல்லப்படக்கூடிய அச்சு முறிந்துவிடும். அதனால், ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படும் என்று கூறினார்கள். இந்த விஷயத்தில் லல்லு பிரசாத் அவர்களே நேரடியாக களத்தில் இறங்கி பல சரக்கு ஏற்றுகிற இடங்களுக்கு சென்று பார்த்து அங்கிருக்கக்கூடிய ஊழியர்கள், பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கலந்தாலோசித்தார். அப்பொழுது தான் லல்லு பிரசாத் அவர்களுக்கு தெரிந்தது, ’ஒவ்வொரு இரயிலிலும் 22.9 டன் வரை எடையை ஏற்றினாலும் இரயிலின் பாதுகாப்பு எந்த பாதிப்பும் வராது’ என்று.

ஒருவேளை விபத்து நடந்துவிடுமோ என்று பயந்தே இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் இந்த வரம்பை அதிகப்படுத்தவில்லை என்று லல்லு பிரசாத் தெரிந்துக்கொண்டார். அதனால், எடையை அதிகரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்தார்.  உடனே, சரக்கு இரயிலின் உச்சவரம்பை 22.9 டன் வரை உயர்த்தினர்.

ஒரு டன்னுக்கு 500 கோடி வீதம், கூடுதலான் 2.6 டன்னுக்கு 1300கோடி ரூபாய் எந்த செலவுமே இல்லாமல் இரயில்வே நிர்வாகத்திற்கு கிடைத்தது.

இதே போன்று இரயில்வே நிர்வாகத்தின் விளம்பரத்தின் மூலம் கிடைத்த வருமானம் 2005 ஆம் ஆண்டு 50 கோடி. லல்லு பிரசாத் ஆட்சியில் அது 78 கோடியாக உயர்ந்தது. கேட்டரிங் மூலம் கிடைத்த வருமானம் 42 கோடி. லல்லுப் பிரசாத் ஆட்சியில் 76 கோடி.

இது போன்று தன்னுடைய மாத்தி யோசிக்கும் திறன், துணிச்சலான முடிவெடுக்கும் திறனால் தன் ஆட்சியை இரயில்வே துறையின் பொற்காலமாக மாற்றினார்.

லல்லு பிரசாத் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரயில்வே துறையின் கையிருப்பு பணம் 142 கோடி. லல்லு பிரசாத் ஆட்சியில் அது 12,000 கோடியாக உயர்ந்தது.


நீங்கள் நினைக்கலாம். இது எல்லாம் லல்லு பிரசாத் அவர்களா செய்தார். அவருடன் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் அனைவரும் அதற்கு முன்பும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால், அவர்களை சுதந்திரமாக செயல்பட வைத்து அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு துணிச்சலான முடிவெடுத்தவர் லல்லு பிரசாத் யாதவ் தான்.

இன்றைய தேதியில் உலகின் தலைச்சிறந்த வணிக பள்ளி என்றால் அது “Harvard Business School” தான். இந்தியாவில் சிறந்த வணிக பள்ளி “I.I.M Ahmedabad”. இந்த இரண்டு இடங்களிலுமே லல்லுப் பிரசாத் இரயில்வே துறையில் செய்த மாற்றங்களை ஆய்வுத் தொகுப்பாக வைக்கப்பட்டு இன்றளவும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனி என்றாவது பேருந்துக் கட்டணத்தை விட, 50% குறைவான செலவில் இரயிலில் பயணம் செய்தால் அந்த சமயம் லல்லுவின் இந்த வித்தியாசமான சிந்தனையை சிறிது நினைத்துப் பாருங்கள்.

Tuesday, May 6, 2025

அமெரிக்க விமான நிலையம்

ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் மிகவும் அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கும். பல கோடிகள் செலவு செய்து ரொம்ப ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அது ஏன் தெரியுமா?

வெளிநாட்டிலிருந்து ஒரு நபர் இன்னொரு நாட்டிற்கு வருகிறார் என்றால் அவர் முதலில் பார்வையிடுவது அந்த நாட்டினுடைய விமான நிலையத்தை தான். அந்த First Impression Best Impression -ஆக இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இவ்வளவு அழகாக வடிவமைக்கப்படுகிறது. சில சின்னச்சின்ன நாடுகள் கூட, நல்ல விமான நிலையங்கள் வடிவமைக்க இவ்வளவு பணவு செலவு செய்வதற்கு இது தான் காரணம். சின்னச்சின்ன நாடுகளே விமான நிலையத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் பொழுது அமெரிக்கா மட்டும் சும்மா இருக்குமா என்ன?

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு உள்நாட்டு விமான நிலையம் கூட அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். வடிவமைப்பு மட்டுமல்ல.. அந்த விமான நிலையங்கள் அனைத்துமே மிகவும் அழகாகவும் நிர்வகிக்கப்படும். அதாவது விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவையுமே அவ்வளவு அருமையாக இருக்கும்.

அமெரிக்காவில் எல்லா விமான நிலையங்களிலுமே அங்கு வரக்கூடிய பயணிகளிடம் பின்னூட்டம் (Feedback) வாங்கப்படும். அங்கு வரக்கூடிய பயணிகள் அந்த விமான நிலையத்தைப் பற்றி ஏதாவது குறை சொன்னால் அந்த குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

ஆனால், பொதுவாகவே எல்லா விமான நிலையங்களிலும் 80 சதவீத பயணிகள் ஒரே ஒரு குறையை மட்டும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த ஒரு குறையை மட்டும் விமான நிலைய அதிகாரிகளால், முழுவதுமாக நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதை எப்படி சரி செய்வது என்று முடிவெடுக்கத்தான் உள்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் ஒரு குழுவாக கூடியிருந்தார்கள். அது என்ன பிரச்சனை என்றால், பயணிகள் அனைவருக்குமே அவர்களுடைய உடைமைகள் (Luckages) தாமதமாக கிடைக்கிறது என்ற குறைதான் அது. அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் 15 நிமிடங்களில் அவர்களுடைய லக்கேஜ்கள் கைக்கு கிடைப்பது போல் செய்தார்கள். ஆனால், இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் 15 நிமிடமும் அதிகம் தான் என்று இந்த ஒரு குறையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த குறையை எப்படி சரி செய்வது என்று ஒவ்வொரு விமான நிலைய அதிகாரியும் தங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு புதுப்புது ஐடியாக்களை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஒரு அதிகாரி என்ன சொன்னார் என்றால், “நாம் ஒவ்வொரு விமான நிலையத்திலும் கூடுதலாக சில கீழ் நிலை ஊழியர்களை அறிமுகப்படுத்தலாம். அந்த ஊழியர்கள் மூலமாக நாம் விரைவிலேயே லக்கேஜ்களை கொண்டு வர ஏற்பாடு செய்யலாம்” என்று கூறினார்.

“ஒவ்வொரு விமான நிலையத்திலும் இரண்டு, மூன்று ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டுமா? அப்படி என்றால் அவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் வேறு கொடுக்க வேண்டும். இது மேலும் செலவு அதிகரிக்கும் வேலை. இது வேண்டாம்” என்று நிராகரித்துவிட்டார் தலைவர்.

அடுத்து வேறொரு அதிகாரி இன்னொரு ஐடியாவைக் கூறினார்.

“அதாவது லக்கேஜ்களை தானியங்கி முறையில் எடுத்து வரும் அந்த Conveyor Belt களின் நீளத்தையும், வேகத்தையும் நாம் மேலும் அதிகப்படுத்தலாம். இதற்கு மாதாமாதம் சம்பளம் என்று தனியாக தரவேண்டாம். ஒருமுறை முதலீடாக செய்துவிடலாம். இப்படி செய்தால் லக்கேஜ்கள் சீக்கிரமே நமக்கு கிடைத்துவிடும்.” என்று சொன்னார்.



இதுபோல் ஒவ்வொரு விமான நிலையத்திலும் இப்பொழுது இருப்பதைப் போன்று அதிவேக Conveyor Belt-களை வடிவமைக்க எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார்கள்.

அதற்கு பல மில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. அப்படியே செலவழித்தாலும், தோராயமாக எவ்வளவு நேரத்தில் லக்கேஜ்கள் கிடைக்கும் என்றால் 8 அல்லது 9 நிமிடத்தில் பயணிகளிடம் லக்கேஜ் வந்து சேரும். வெறும் ஆறு நிமிடத்தைக் குறைப்பதற்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? இந்த யோசனையும் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார் தலைவர்.

இந்த இடத்தில் தான் ஒரு வித்தியாசமான யோசனையை ஒரு அதிகாரி முன்வைக்கிறார். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் லக்கேஜ்களை இதைவிட சீக்கிரம் கொண்டு வர இயலாது. ஆனால், அதற்கு பதிலாக நம்மால் பயணிகளை தாமதப்படுத்த முடியும்.

பயணிகள் விமான நிலையத்தில் இருந்து லக்கேஜ் இருக்கக்கூடிய இடத்திற்கு போகும்பாதையை நேரடியாக இல்லாமல் வேறொரு வழியை ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்கும் நேரத்தை தாமதப்படுத்தலாம். விமானத்தில் இருந்து லக்கேஜ் எடுத்துக் கொண்டு வரக்கூடிய பாதைகளில் சில கடைகளை ஏற்பாடு செய்யலாம். அதாவது அந்த உள்ளூர் விமான நிலையங்களுக்கு ஏற்றார் போன்ற கடைகளை ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். இந்த ஐடியாவைப் பின்பற்றினால் நாம் பயணிகளைத் தாமதப்படுத்த முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.

அவர் இந்த ஆலோசனையை சொன்னதும் “இது நல்ல வித்தியாசமான யோசனைதான்” என்று அனைவரும் ஒருமனதாக இதனை ஏற்றுக் கொண்டார்கள்.

அதுமட்டுமல்லாது இந்த யோசனையை செயல்படுத்திப் பார்க்க பெரிதாக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால், சோதனை முயற்சியாக முதல் மூன்று விமான நிலையங்களில் இந்த முறை உடனடியாக செயல்படுத்திப் பார்க்கப்பட்டது.

அவர்கள் எதிர்பார்த்தது போன்றே பயணிகள் வருவதற்கு முன்பாகவே அவர்களுடைய லக்கேஜ்கள் வந்து சேர்ந்திருந்தது. பைசா செலவில்லாமல் பயணிகளின் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது பயணிகள் வரக்கூடிய பாதைகளில் புது கடைகள் அமைத்ததால் அதன் மூலம் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் வருமானமும் அதிகரித்தது.



பார்த்தீர்களா?

இதுதான் மாத்தி யோசிக்கும் திறனின் வெற்றி. நீங்களும் ஒரு தொழிலதிபராக இருக்கலாம். அந்த தொழிலில் அதிகமான பணம் செலவழித்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்படும். அந்த நேரத்தில் பணமே செலவு செய்யாமல் எப்படி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று யோசியுங்கள். அல்லது எப்படி குறைவான பணத்தில் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று யோசியுங்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால், உங்களுக்கும் இது சாத்தியம் தான்.

All the best..!